தமிழக பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க, எமிஸ் திட்டம், 2011ல் அறிவிக்கப் பட்டது. இதுதொடர்பாக, 'எமிஸ்' இணையதளம் துவங்கப்பட்டு, விபரங்களை பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.
மாணவர்களின் எண்ணிக்கை, பெயர், வகுப்பு, ரத்த பிரிவு, முகவரி, 'ஆதார்' எண், மொபைல் போன் எண் போன்ற விபரங்களை பதிவேற்றம் செய்ய, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பள்ளிகளும், ஆறு ஆண்டுகளாக சில ஆசிரியர்களை நியமித்து, இந்த பணிகளை மேற்கொள்கின்றன. ஆனால், அனைத்து தகவல்களும் அவ்வப்போது மாயமாவதும், அதை மீண்டும் பதிவேற்றம் செய்ய சொல்வதும் தொடர் கதையாக உள்ளது. எமிஸ் தகவல்களை, இணையதளத்தில் இருந்து யாரும் திருடுகின்றனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னையால், அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியால் செயல்பட்ட, எமிஸ் இணையதளம், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. சமீபத்தில், 'ஆண்ட்ராய்டு' செயலியும் கொண்டு வரப்பட்டது. அதிலும் குழப்பம் ஏற்பட்டு, இரண்டாவது செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, மீண்டும் முதலில் இருந்து, தகவல்களை பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனால், பாடங்களை நடத்துவதா, விபரங்களை பதிவேற்றுவதா என, பள்ளிகள் தவிக்கின்றன. பள்ளிக் கல்வித்துறை, ஏற்கனவே சேகரித்த விபரங் களை மீண்டும் மீண்டும் கேட்டு, ஆசிரியர்களை தொல்லை செய்வதை விட்டு, நல்ல தொழில்நுட்ப நிறுவனத்திடம், இந்த பணியை ஒப்படைக்கலாம் என, ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment